Sunday 5th of May 2024 09:33:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கான் படுகொலைகளுடன் தொடர்புடைய  10 அவுஸ்திரேலியப் படையினர் பணி நீக்கம்!

ஆப்கான் படுகொலைகளுடன் தொடர்புடைய 10 அவுஸ்திரேலியப் படையினர் பணி நீக்கம்!


ஆப்கானிஸ்தானில் அப்பாவிப் பொதுமக்கள் 39 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அவுஸ்திரேலிய விசேட படையணியைச் சோ்ந்த 10 பேரை பணி நீக்கம் செய்து அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியப் படையினர் மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் நம்பகமான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ABC) இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மோதலின்போது அங்கு நிலைகொண்டிருந்த அவுஸ்திரேலிய விசேட படையினரால் சட்டவிரோதமாக 39 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான நம்பகமான சான்றுகள் உள்ளதாக இது குறித்து இடம்பெற்ற விசாரணை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது படைகளின் தவறான நடத்தைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை (ADF) கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணைகளை முன்னெடுத்து வந்தது. இந்த விசாரணையில் அவுஸ்திரேலியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கான சான்றுகள் உள்ளதாகத் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை விசேட குழுவால் 57 குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்கப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்தனர்.

விசாரணைகளில் சில படையினர் போர் விதிகளை மீறி வெட்கக்கேடான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேவிய பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அங்கஸ் காம்ப்பெல் கருத்து வெளியிட்டார்.

2009 முதல் 2013 வரையான காலப்பகுதியில் கைதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அவுஸ்திரேலிய படையினர் 19 பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சேவையில் உள்ள அல்லது ஒய்வு பெற்ற 25 படையினர் நேரடியாகப் படுகொலைகளைக் குற்றங்களுடன் தொடர்புபட்டுள்ளனர் அல்லது குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்களின் பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலிய விசேட விமானப் படைப் பிரிவைச் (SAS)சேர்ந்த உயர் அடுக்குகளில் உள்ளவர்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவிப் பொதுமக்களின் கொலைகள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போருடன் தொடர்புபடாதவை என ஜெனரல் காம்ப்பெல் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு முகம் கொடுத்துள்ள ஒவ்வொருவரும் போர் விதிகளை நன்கு புரிந்து கொண்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சில படையினர் மேலிட உத்தரவுகள் ஏதுமின்றி தன்னிச்சையாகச் சட்டங்களைத் தமது கையிலெடுத்து ஆபத்தான வகையில் செயற்பட்டுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேவிய பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் அங்கஸ் காம்ப்பெல் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே இந்தப் படுகொலைகளுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 10 அவுஸ்திரேலிய சிறப்புப் படையினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: ஆஸ்திரேலியா, உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE